Saturday, August 14, 2010

கருகிய மலர்களுக்காக!!!




தீயே!!!


காதினில் செய்தி கேட்டு
கண்ணீரால் குளித்துவிட்டோம்
வீட்டுக்கு வீடு
நாங்கள் வெறுத்துவிட்டோம் உணவை
தீயால் அது தீண்டப்பட்டதால் !!!

காலை மாலை என
மலரும் பத்திரிக்கை மலர்களும்
கருகிய மலர்களாகவே
கண்ணில்ப்பட்டன !!!

சோறூட்ட எடுத்த மழலை
தன் கையில் சோறில்லை என்றாலும்
அந்த விரிந்த விரல்களை சுவைக்க
நாங்கள் இருந்த விரதங்கள் தான்
எத்தனை தெரியுமா?

மாநாடாய் கூடிய இந்த மழலையர் கூட்டத்தை
தீயிலிடப்போகும்
உன் திட்டம் தெரிந்திருந்தால்
கருவிலேயே எங்கள் தாய் கலைத்திருப்பாளே !!!

அழுவதற்கென்றே அரங்கம் அமைத்ததுபோல்
எம் அன்னையரெல்லாம் அழுவதை பார்த்தால்
நெஞ்சிருந்தால் நீ நெகிழ்ந்திருப்பாய்
பிஞ்சை பறித்த உனக்கு
நெஞ்சேது நெகிழ்வேது !!!

செத்த உடல்களே வருவதால்
சாகாத உடல் வேண்டி
உன் இடு காட்டை இடமாற்றி
இங்கு வந்தாயோ ?

கொட்டி கொடுத்தோம் நிவாரணம்
குஜராத்திற்கும் ஒரிசாவிற்கும்
இன்னும் எத்தனை பொருள் குவியல் தான் வேண்டும்
எடுத்துக்கொள் தீயே இந்த பிணக்குவியலை
உன்னால் பிழைக்க வைக்க முடியுமா ?

காடுகள் எத்தனையோ காத்திருக்கும்போது
உன் அகோர பசிக்கு
இந்த அரும்புகள்தான் அகப்பட்டதா ?

ஒட்டுறவு இல்லை என்றாலும்
உலகமே அழுகிறது !!!
பூவையும் மொட்டையும் நீ
பொசுக்கிவிட்டதால்!!!
பற்றிய தீயே நீ
பசியாறி விட்டாயா ?

உன் பாவச்செயலால்
சாய்ந்தது பிணங்கள் மட்டுமா
எங்கள் மனங்களும்தான் !!!

No comments:

Post a Comment